Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeஆன்மீக தகவல்கள்திருப்புகழ்அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (1 – 10)

#1

கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா

அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி

அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே

 

#2

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம்

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி

வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே

 

 

#3

உம்பர் தரு தேநு மணி கசிவாகி ஒண் கடலில் தேனமுதத்து உணர்வூறி

இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே

தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே

அன்பர்தமக்கான நிலை பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுக பெருமாளே

 #4

நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட

நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் நிகழ் பால் தேன்

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி

நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்

மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர

வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு

வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல்

திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை

செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை

திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட

டிமுட டிமுடிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட

எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே

#5

விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான்

விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய

கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே

இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற

அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட

அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே

#6

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே

#7

அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை

அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் இரு தோளுற்று

அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட

அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு

உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம்

உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து

உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற

உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக

இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று

இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை

இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே

செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர்

திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர்

திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ

திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

#8

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை

உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா

உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்

உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்

கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள்

கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே

வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண

விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை

விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே

தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு

சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்

திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

#9

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து

கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை

அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்

எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற

அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து

அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே

#10

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு

கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே

கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர்

கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடு போகி

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர

நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே

நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட

நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே

நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என

நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும்

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு

நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள

சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு

திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments