அருணகிரிநாதர் அருளிய திருப்பரங்குன்றம் திருத்தலத்திற்கான திருப்புகழ்
உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா
உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே
கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள்
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே
வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா
மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே
தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே
தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே
இத்திருப்புகழை தினமும் பாராயணம் செய்யும்போது, கேட்கும் போதும் மனக்கலக்கம் நீங்கி, மன உறுதி பெறலாம்
உனை தினம் தொழுதிலன் திருப்புகழ் பாடல் கேட்க
தல சிறப்பு:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது முதல்படைவீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்.
தல வரலாறு
தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது. சூரனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானை திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர். நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது.