அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் திருத்தலத்திற்கான திருப்புகழ்
பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர்
ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும்
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே
சலிப்புற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன்
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே
இத்திருப்புகழை தினமும் பாராயணம் செய்யும்போது, வருமானம் பெருகி, தொழிலில் வெற்றி பெறலாம்
பெருக்க சஞ்சலித்து திருப்புகழ் பாடல் கேட்க
தல சிறப்பு:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது இரண்டாவது படைவீடாகும். இத்தலம் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.
தலபெருமை:
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு:
தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்’ என மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்’ (ஜெயந்தி – வெற்றி) என அழைக்கப்பெற்று, “திருச்செந்தூர்’ என மருவியது.