அருணகிரிநாதர் அருளிய சுவாமி மலை திருத்தலத்திற்கான திருப்புகழ்
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா
பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறை மீளா
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே
சூதம் மிக வளர் சோலை மருவு சுவாமிமலைதனில் உறைவோனே
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே
இத்திருப்புகழை தினமும் பாராயணம் செய்யும்போது மன அமைதி பெறலாம்
பாதி மதி நதி போதும் அணி திருப்புகழ் பாடல் கேட்க
தல சிறப்பு:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும். இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். இதிலிருந்து சிவனும் முருகனும்” வேறு வேறு அல்லர் என்பது புலனாகும். மூலவருக்கு எதிரில் இங்கு மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது.இது ஹரிகேசன் என்ற அரக்கனை சுவாமிநாதபெருமானை வணங்கி வென்றதால் இந்திரன் தன் காணிக்கையாக இந்த (ஐராவதம்) யானையை தந்ததாக புராணம் கூறுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
தல வரலாறு:
படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார். சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார். இதை பார்த்து உளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது.