அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் பாடப்பெற்ற முதல் அலங்கார நூல் இதுவாகும். காப்பு பாடல் ஒன்றும், நூற்பயன் பாடல் எழும் சேர்ந்து மொத்தம் 108 பாடல்கள் கொண்ட இந்நூல் முருகனிடமிருந்து ஞான உபேதசம் பெறுவதைப் போன்று பாடல்கள் அமைந்துள்ளன.
இந்நூல் வெவ்வேறு வேளைகளில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு என்றும், முருகனால் உபதேசம் பெற்றப்பட்ட போது எழுதப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
அருணகிரிநாதர் உலக வாழ்வை வெறுத்து, உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தபோது இவரைக் காப்பாற்றி முருகன் வழங்கிய உபதேசங்களைப் பற்றி இந்நூல் கூறுகிறது. கந்த சஷ்டி நாளில் முருகன் பக்திப் பாடல்களாக இந்நூல் பாடப்படுகிறது.
Kandar Alangaram Lyrics in Tamil
கந்தர் அலங்காரம்
காப்பு
அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. …
நூல்
1.
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. … 1
2.
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. … 2
3.
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவந்த்ர லோகம் பிழைத்ததுவே. … 3
4.
ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே. … 4
5.
திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. … 5
6.
பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே. … 6
7.
சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. … 7
8.
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே. … 8
9.
தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே. … 9
10.
சொல்லுகைக் கில்லையென் றெல்லாமிழந்து சும்மா விருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்ட வாஇகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. … 10
11.
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே. … 11
12.
படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்
துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம்
இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. … 12
13.
ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே. … 13
14.
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே. … 14
15.
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே. … 15
16.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. … 16
17.
வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே. … 17
18.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. … 18
19.
சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் தொளைத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்குணம் பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே. … 19
20.
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே. … 20
21.
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. … 21
22.
மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. … 22
23.
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே. … 23
24.
கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே. … 24
25.
தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலுனக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே. … 25
26.
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே. … 26
27.
ஓலையுந் தூதருங் கண்டுதிண் டாட லொழித்தெனக்குக்
காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள்மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே. … 27
28.
வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான்மன வாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ் வாறு புகல்வதுவே. … 28
29.
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பணையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும்வெங் காம சமுத்திரமே. … 29 .
30.
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. … 30 .
31.
பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே. … 31
32.
கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னேதுறந் தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்நாள்வந் திரட்சிப்பையே. … 32 .
33.
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே. … 33
34.
பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே. … 34 .
35.
பத்தித் துறையிழிந் தாநந்த வாரி படிவதினால்
புத்தித் தரங்கந் தெளிவதென் றோபொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே
குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே. … 35
36.
சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்ப மின்பங்
கழித்தோடு கின்றதெக் காலநெஞ்சே கரிக் கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னேமுத்தி கிட்டுவதே. … 36
37.
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. … 37 .
38.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. … 38
39.
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னி லொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே. … 39
40.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. … 40
41.
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன்மலர்த் தாள்தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ் வேலவனே. … 41 .
42.
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங்
குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டு மல்குற் குருகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங்ஙன் வாய்த்ததுவே. … 42
43.
கவியாற் கடலடைத் தோன்மரு கோனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றியன்பாற்
குவியாக் கரங்கள்வந் தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே. … 43
44.
தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே. … 44
45.
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றான்னிரு கோட்டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்
குரு பூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே. … 45
46.
நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதரல்குற்
றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மநோதுக்க மானது மாய்வதற்கே. … 46 .
47.
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே. … 47
48.
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றி லேன்முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. … 48
49.
சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ்
சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. … 49
50.
படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே. … 50
51.
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியன்பின்
நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்
தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
இலையா யினும்வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே. … 51
52.
சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமரா
குகராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே. … 52
53.
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. … 53
54.
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்க்கொன்
றீகைக் கெனைவிதித் தாயிலை யேயிலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே. … 54
55.
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்பு செய்யா ரென்செய் வார்யம தூதருக்கே. … 55
56.
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக்
குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவனுார்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே. … 56
57.
பொருபிடி யுங்களி றும்விளை யாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம்
இருபிடி சோறுகொண் டிட்டுண் டிருவிளை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே. … 57
58.
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க் கினியவன் தேவந்த்ர லோக சிகாமணியே. … 58
59.
பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ
எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த
வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே. … 59 .
60.
சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியை
வந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன்மயில் வாகனனைச்
சந்திக் கிலேன்பொய்யை நிந்திக்கி லேலுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே. … 60
61.
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. … 61
62.
ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே. … 62
63.
பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப்
போதித்த நாதனைப் போர்வேல னைச்சென்று போற்றியுய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச்
சாதித்த புத்திவந் தெங்கே யெனக்கிங்ஙன் சந்தித்ததே. … 63
64.
பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன்
கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே. … 64
65.
வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள்
எட்டுங் குலகிரி யெட்டும்விட் டோடவெட் டாதவெளி
மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே. … 65
66.
நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கைநில் லாதுசெல்வம்
பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே
ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்
வேற் குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றே. … 66
67.
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன்மத கும்பகம்பத்
தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே. … 67
68.
சாடுஞ் சமரத் தனிவேன் முருகன் சரணத்திலே
ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப்
பாடுங் கவுரி பவுரிகொண்டாடப் பசுபதிநின்
றாடும் பொழுது பரமா யிருக்குமதீதத்திலே. … 68
69.
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி யெனைத்தேற் றியபின்னர்க் காலன் வெம்பி
வந்திப் பொழுதென்னை யென்செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்
சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே. … 69
70.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. … 70
71.
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொருக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன் சொன்ன
கருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. … 71
72.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. … 72
73.
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே. … 73
74.
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்
குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டுங்கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டு மேன்றால்
இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யெளிதல்லவே. … 74
75.
படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே. … 75
76.
கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டையந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்
பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே. … 76
77.
சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேரஎண்ணி
மால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே. … 77 .
78.
கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண் டாடுவிர்காள்
போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந்
தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிைகையும்
ஆர்கொண்டு போவரை யோகெடு வீர்நும் மறிவின்மையே. … 78 .
79.
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங்
கந்தா இளங்கும ராஅம ராவதி காவலனே. … 79 .
80.
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றவன்வந் தாலென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. … 80
81.
தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற்கட்டுஞ்
சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே. … 81
82.
தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்ட ரீகனண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்ட வெட்டிப்
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே. … 82
83.
தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
வாங்கிய னுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே. … 83
84.
மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்
பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே. … 84
85.
காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவெளிதே விழிநாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே. … 85
86.
வேலா யுதன்சங்கு சக்ராயு தன்விரிஞ் சன்னறியாச்
சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே. … 86
87.
குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே. … 87
88.
வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக்
குணம் கெட்ட துட்டனை ஈடேற்றுவாய் கொடியும் கழுகும்
பிணங்கத் துணங்கை அலகை கொண்டாடப் பிசிதர்தம் வாய்
நிணம் கக்க விக்கிரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே. … 88
89.
பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை
தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப்
பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே. … 89
90.
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. … 90
91.
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்
பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. … 91
92.
தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்டவெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே. … 92
93.
மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே. … 93
94.
தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு வள்ளைதள்ளித்
துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லைநல்ல
வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே. … 94 .
95.
யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே. … 95
96.
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில் நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. … 96
97.
சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப்
பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே. … 97
98.
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா
நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. … 98
99.
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. … 99
100.
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா! கிரெளஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே. … 100
நூற்பயன்
101.
சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவிதான்கற் றறிந்தவரே. … 101
102.
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே. … 102
103.
இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாளரு ளாய்கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே. … 103
104.
செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே. … 104
105.
ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே. … 105
106.
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்
தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவ னேமயிலேறிய மாணிக்கமே. … 106
107.
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே. … 107
… கந்தர் அலங்காரம் முற்றிட்டு …