அருணகிரிநாதர் அருளிய பழமுதிர்சோலை திருத்தலத்திற்கான திருப்புகழ்
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே
மா மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மா பாதம் அணிந்து பணியேனே
ஆதியோடந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெரியேனே
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே
நாதமோடு விந்துவான உடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய்
சூரர் குலம் வென்று வாகையோடு சென்று சோலை மலை நின்ற பெருமாளே
இத்திருப்புகழை தினமும் பாராயணம் செய்யும்போது நினைத்த காரியம் நினைத்த படி முடியும்
வாதினை அடர்ந்த வேல் விழியர் திருப்புகழ் பாடல் கேட்க
தல சிறப்பு:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.
தல வரலாறு:
தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார்.
இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, “”என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?” என்றான். சந்ததோஷப்பட்ட பாட்டி “”வேண்டும்”என்றார்.உடனே முருகன்,””பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?”என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,””சுட்ட பழத்தையே கொடேன்”என்றார்.
சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,””பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்”என்று கூறி சிரித்தான்.