அருணகிரிநாதர் அருளிய பழனி திருத்தலத்திற்கான திருப்புகழ்
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய்
அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய்
சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய்
மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர்
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே
இத்திருப்புகழை தினமும் பாராயணம் செய்யும்போது, வாழ்வில் முன்னேற்றம் பெறலாம்
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து திருப்புகழ் பாடல் கேட்க
தல சிறப்பு:
இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.
தல வரலாறு:
நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளை பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், “குழந்தை வேலாயுதர்’ என்று பெயர் பெற்றார்.பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், “பழம் நீ’ (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், “பழநி’ என மருவியது.