Sunday, February 2, 2025
No menu items!
Google search engine
Homeஜீவசமாதிமாற்றம் தரும் மகான்கள்மாற்றம் தரும் மகான்கள் | மகா அவதார் பாபாஜி

மாற்றம் தரும் மகான்கள் | மகா அவதார் பாபாஜி

மாற்றம் தரும் மகான்கள் | மகா அவதார் பாபாஜி | கடலூரில் அவதரித்தவர் இமயம் சென்றது எப்படி?

ஆத்மா அழிவற்றது, கோடான கோடி ஜென்மங்கள் எடுத்து மீண்டும்,. மீண்டும் பூமியில் பிறக்கும் மனிதன் தான் யார் என்பதை இறுதிவரை அறிய முடியாமலே மடிந்து போகிறான். ஆனால் சித்தர்கள் யோகிகள் அப்படி அவர்களுக்கு வந்த நோக்கமும் தெரியும் போகும் பாதையும் விளங்கும். அதனாலே அவர்களின் செயல்களை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இப்புவியில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன் என்கின்றார் கிருஷ்ண பரமாத்மா கீதையில் அப்படி இவ்வுலகில் பல மகாத்மாக்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று

பூமியில் மனிதர்களாக பிறக்கின்றார்கள், மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்ந்தாலும் அவர்கள், அனைவரும் மகான்கள் என்பது பலருக்கும் தெரியாது, நம்மோடு வாழ்வு மட்டும் ஒரு மகான்  சாதாரணமானவர் என்று கருதி விட  முடியாது

சித்தர்கள் யோகிகள் மகான்கள் என்பது எல்லாமே ஒரு படிநிலையில் புரிதலுக்காக வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களே, ஆனால் மொத்தத்தில் அவர்கள் அனைவருமே இறைத்தூதர்கள் தான், அப்படி மண்ணில் மனிதனாக பிறந்து, சித்தராக, யோகியாக, ரிஷியாக, முனிவராக, ஞானியாக, தவசியாக, ஆன்மீகவாதியாக இறைவன் கட்டளைகளை ஏற்று என்றும் இறை தர்மத்தோடு நிஷ்காமிய கர்மா எனப்படும் நன்மைகளை மட்டும் செய்து இன்னமும் ஸ்தூலமாகவும் சூட்சமமாகவும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றித்தான், தரிசிக்க இருக்கின்றோம்.

மாற்றம் தரும் மகான்கள் கலியுகத்தில் ஒரு மனிதன் இறை அருளைப் பெற மிகச்சிறந்த வழி குரு வழிபாடுதான். இந்த உலகம் முழுவதும் இருக்கும் இறையாற்றலை எல்லாம் இணைக்கும் ஒரு கருவியாக இருப்பவர்கள் தான் மகான்கள். அதனால் வாழ்வில் கர்ம வினைகள் தீர கட்டாயம் குரு அருள் அவசியமாகும். குருவில் இரண்டு வகை உண்டு ஒன்று ஸ்தூல குரு. இன்னொன்று சூட்சும குரு.

சூட்சுமமாக  இருக்கும் சித்தர்களையோ அல்லது ஒரு ரிஷியையோ குருவாக நினைத்து மானசிகமாக வழிபாடு செய்ய, சூட்சுமத்தில் இருக்கும் குருவே ஸ்தூல குருவை அனுப்பி வைப்பாராம். குருவை நாம் வேண்டலாமே தவிர, அவர்களை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. குரு மட்டுமே சீடரை தேர்ந்தெடுக்க முடியும் இன்னும் தெளிவாக சொல்லப்போனால், குரு நினைத்தாலே சீடனால் குருவை பற்றி யோசிக்கவே முடியுமாம். சித்தர்கள் என்றாலே தமிழகம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால் அந்த தமிழகம் என்பது இன்றைய தமிழ்நாடு அல்லது குமரிக்கண்டமாகும்.

குமரி கண்ட அதன் முடிவு இமயம் என்றால் நம்ப முடிகிறதா, ஆம் ஒரு காலத்தில் தமிழே உலகத்தை ஆண்டது, அதனால்தான் தமிழகத்தில் பிறந்த பலர் இமயமலையைச் சுற்றி பல இடங்களில் ஜீவ சமாதி அடைந்திருக்கின்றார்கள். அப்படி தமிழகத்தில் நாகராஜாக பிறந்து வளர்ந்த சிறுவன் ஒருவன், எப்படி கிரியா யோகியாக இமயத்தில் இருந்தபடி உலகம் முழுக்க தன் ஆட்சியை செலுத்தி வருகிறார் என்பதை இனி காணலாம்.

பாபாஜி அவதாரமும், ஞானத் தேடலும்

 

babaji

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையில், சித்தர்களின் தலைவர் முருகப் பெருமானுக்கு உரிய கார்த்திகை மாதத்தில், கார்த்திகை தீபத் திருநாளன்று, ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி கூடிய சுபதினத்தில் ஸ்வேதா நாதருக்கும்,  ஞானாம்பிகை அம்மையாருக்கும் மகனாக அவதரித்தார் பாபாஜி. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நாகராஜ். பிறந்தது முதல் மற்ற குழந்தைகள் போல இல்லாமல், மிகவும் விசித்திரமாக, வித்தியாசமாக ஞான தேடலில் இருந்தார் நாகராஜ்.  இறைவனை எப்படியாவது காண வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க அதை அடைய வேண்டி ஞானியார் தொடர்பை பெறுவதற்காக சித்தர்களை தேடி வீட்டை விட்டுச் சென்றார் நாகராஜ். அப்பொழுது அவருக்கு வயது 11 எப்படியாவது சித்தர்களை தரிசித்தே தீர்வது, என்ற ஆர்வத்தில் பல ஊர்களிலும் சித்தர்களை தேடி, தேடி அலைந்து இறுதியில் சித்தர்கள் பூமியான இன்றைய இலங்கைக்கு வந்தார் பாபாஜி.

இலங்கை என்றால் பலரும் பலவிதமாக எண்ணலாம். ஆனால் அது ஒரு சொர்க்க பூமி. இன்றும் சித்தர்கள் வாழும் தேவ பூமி, ஆயிரக்கணக்கான ஜீவ சமாதிகள் இருக்கும் அதிசய பூமி. மொத்தத்தில் இயற்கை அன்னை தாலாட்டும் ஒரு அற்புதமான நாடுதான் இலங்கை. ஆதிகாலம் முதல் சித்தர்கள் பலர் வாழ்ந்து வரும் இலங்கையில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஒரு சக்தி வாய்ந்த கோயில்தான் கதிர்காம முருகன் கோயில்,  இறை தேடலில் குருவை நாடி இங்கு வந்த பாபாஜி மனம் உருகி தனது குருவை காட்டுமாறு, முருகப்பெருமானிடம் உருகி வேண்டி நின்றார்.

அப்பொழுது அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது, சாக்ஷாத் அந்த போகர் சித்தரே பாபாஜியின் ஆர்வத்தையும், ஆத்மாவின் பரிணாம லட்சியத்தையும் கண்டு வியந்து ஸ்தூலமாக கண்முன் தோன்றி காட்சி தந்து சீடனாக ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல பாபாஜிக்கு தீட்சையையும், கதிர் காம முருகன் கோவிலில் தந்தார் போகர் சித்தர். 

மூலவர் இல்லாத அதிசய கோயில்

இயற்கை சூழலில் அமைந்திருக்கும் ஒரு அற்புதமான கோயில் கதிர்காமம் முருகன் கோயில். இத்தலம் அருகே இருக்கும் மாணிக்க கங்கை நதி நம் நாட்டின் கங்கையை போல ஒரு புனிதமான ஜீவ நதியாகும். நவபாஷான சிலையை பழனியில் பிரதிஷ்டை செய்த போகசித்தரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த கதிர்காமம் முருகன் கோயில்.

kathirkamam murugan temple

எத்தலத்திலும் இல்லாத உலக அதிசயமாக இங்கு கருவரையில் மூலவர் சிலைக்கு பதிலாக, கருவரை முன் ஒரு திரையே தொங்கவிடப்பட்டு இருக்கிறது. அதில் முருகன் வள்ளி, தெய்வானை ஓவியம் வரையப்பட்டு இருக்கிறது. இந்த திரைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை யாருமே பார்க்கக்கூடாது என்பதற்காக, அதை ஒரு பரம ரகசியமாக பாதுகாத்து வருகின்றார்கள். ஆனால் கருவரையில் இருப்பது போகர் சித்தர் கையாலே உருவாக்கிய சடாச்சர சக்கரம் தான் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றார்கள். இந்த எந்திரத்திற்கே எல்லா சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.

அதுமட்டுமல்ல இது ஒரு ஜீவ சமாதி கோயில் இங்கு பலர் ஜீவ சமாதி அடைந்திருக்கின்றார்கள். இரண்டு முக்கோணங்களால் ஆன இந்த யந்திரம் முன்புதான் பாபாஜிக்கு முதன்முதலில் காட்சி தந்துள்ளார் போகர் சித்தர். மேலும் இத்தலத்தில் தான் பாபாஜிக்கு பல வகையான யோக பயிற்சிகளை கற்றுக் கொடுத்துள்ளார் போகர் சித்தர். இந்த பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள் பல்வேறு பிராணாயாம பயிற்சிகள், தியான முறைகள் மற்றும் இன்னும் பல வகையான யோக பயிற்சிளும் அடங்கும்.

பல நாட்கள் தூங்காமல், உண்ணாமல், உடல், மனம் ஆன்மாவை விழிக்கச் செய்யும் பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்படி பல வருடங்களாக பல பயிற்சிகள் தொடர்ந்தன, இறுதியில் பாபாஜியின் மனதில் ஐம்புலன்களின் வழியே உலகியலோடு தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது, வேறு வகையில் கூறினால் மனிதனின் 36 தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பாபாஜி ஒளி உடலோடு வாழும் யோகி ஆனார். எல்லா தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே தான் என்பதை உணர்ந்தார் அதன் மூலம் தாம் வேறு, பரம்பொருள் வேறு அல்ல, என்பதை தெளிவாக உணர்ந்து ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தரும் அணுக்கூட்டத்தை பிரித்து சேர்க்கும் வித்தையையும் கற்றுத் தேர்ந்தார். இத்தனை பயிற்சி பெற்ற பின்னும் இன்னும் ஒரே ஒரு அதிசக்தி வாய்ந்த உயரிய பயிற்சி இருக்கிறது அதை கற்க நீ அகத்தியர் சித்தரை போய் சந்தி என ஆசீர்வதித்து பாபாஜியை அனுப்பி வைத்தார் போக சித்தர், அந்த பயிற்சிதான் கிரியாயோகம் என்னும் மகா ரகசிய பயிற்சி, அந்த பயிற்சியை கற்பதற்காக தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்கி அகத்தியரை காணச் சென்றார் பாபாஜி.

குற்றால மலையில் அகத்தியர் தரிசனமும், கிரியா யோகமும்

வடக்கே இமயம் என்றால், தெற்கே பொதிகை எண்ணிலடங்காத அதிசயங்களை கொண்ட மலை பொதிகை மலை, இந்த பொதிகை மலையில் ஒளி உடலுடன் வாழ்ந்து வரும், அகத்தியர் அருள் வேண்டி திருக்குற்றால மலையை அடைந்தார் பாபாஜி.

bogar-and-babaji

தேனருவியும், ஐந்தருவியும் துள்ளித் தாவி ஓடும் அழகான குற்றாலத்தில், பாபாஜி அகத்தியரை நினைத்து 48 நாள் கடும் தவம் புரிந்தார் கடும் தவத்தின் பலனாக அகத்தியர் சித்தர் ஒளி உடலோடு அவர் முன் தோன்றினார். பாபாஜியின் தூய்மையான நோக்கத்தையும் குரு பக்தியையும் கண்டு வியந்து போன அகத்தியர் உலகில் யாருக்குமே எளிதில் அளிக்காத கிரியா தீட்சையை அருளினார். பலகாலம் அகத்தியரோடு இருந்து கிரியா யோக பயிற்சியை நன்கு கற்ற பின், ஒருநாள் பாபாஜியை அழைத்த அகத்தியர் இனி நீ இமயமலைக்கு சென்று, இந்த பயிற்சிகளை செய்து வா, மேலும் தகுதியானவருக்கு மட்டும் கற்றுக்கொடு என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார் அகத்தியர் படி பாபாஜி இமயமலை உச்சியில் தனது சூட்சும தவக்குடிலை அமைத்தார். ஆன்மீக வாழ்வில் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்கு பாபாஜி கிரியா தீக்ஷையை இன்றும் வழங்குவதாக நம்பப்படுகிறது. இமயமலையில் இருக்கும் பாபாஜியை யாராலும் ஸ்தூலமாக பார்க்க முடியாதாம். அதே சமயம் பாபாஜி யாரை சீடனாக ஏற்க வேண்டும், என்று முடிவு செய்கிறாரோ அவர்கள் முன் தோன்றி கிரியா தீட்சையை ரகசியமாக வழங்கி வருகிறாராம்.

வேற்று மதத்தில் உள்ள தேவதூதர் கூட இமயம் வந்து பாபாஜியிடம் கிரியா தீட்சை பெற்றதாக கூறப்படுகிறது பாபாஜியிடம் பல சித்தர்கள் யோகிகள் தீட்சை பெற்றுள்ளனர் இதில் முக்கியமானவர் மகான் லாகிரி மகாசாயர் அவர் மூலம் இந்த அரியக்கலை மெல்ல பரவத் தொடங்கியது, லாகிரி மகாராஜ் கிரியா யோகத்தை பலருக்கும் பயிற்றுவித்தார். அதில் ஒருவர்தான் யுக்தேஸ்வர் ஸ்ரீ யுக்தேஸ்வரின் சீடர்தான் பரமஹம்ச யோகானந்தர், இவர்தான் கிரியா யோகாவை உலகறியச் செய்தவர். பாபாஜி பலருக்கும் தீட்சை அருளிய ரகசிய குகை ஒன்று, இமயத்தில் இன்றும் இருக்கிறது என்கின்றார்கள்.

அதனால்தான்அந்த குகைக்குச் செல்ல அதை நிர்வகித்து வரும் ஒய்எஸ்எஸ் எனப்படும் யோகானந்தர் சத்சங்கத்தினரிடம் அனுமதி பெற்று, நாங்களும் இமயமலைக்கு செல்ல தீர்மானித்தோம்.

ஆச்சரியம் தந்த இமயம்

இமயம் என்றதுமே பனிமலை சூழ்ந்திருக்கும் என்று எண்ணிய எங்களுக்கு அது தவறு என்பது பின்னரே புரிந்தது, இமயம் என்பது ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மற்றும் மேற்கு வங்காளம் என சுமார் 2500 கி.மீ உள்ள அமானுஸ்ய மலை.

இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் குமான் பிரதேசத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் துவாராஹாட் குகு சினாவில்  உள்ளது பாபாஜி குகை. இந்த தகவலை எல்லாம் சேகரித்துவிட்டு சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் எங்கள் பயணம் தொடங்கியது, டெல்லி வந்த பின் அங்கிருந்து ஒரு தனியார் வாகனம் மூலம் ரிஷிகேஷ் சென்று அங்கிருந்து, பாபாஜி குகைக்கு செல்ல முடிவு செய்தோம் பாபாஜி கோகைக்குச் செல்ல டெல்லியிலிருந்து இரு வழிகள் உள்ளன என்றனர், அதில் நாங்கள் செல்ல முடிவு செய்தது மிக மிக ஆபத்தான பயணமாகும், ஆனால் இந்த வழியில் சென்றால் மட்டுமே ரிஷிகேஷை தரிசித்துவிட்டு, அங்கிருந்து தேவ் பிரயாக் ருத்ரபிரயாக், கர்ணபிரயாக் என யாருமே இதுவரை பார்க்காத கங்கையின் மூலத்தை அறிய முடியும் என்றார்கள், அதாவது இந்த கிளை நதிகள் தான் கங்கை ஆரம்பமாகும் இடம் என்றனர், அதனால் டெல்லியிலிருந்து பயணிக்க ஆயத்தமானோம், நாங்கள் டெல்லிக்கு வந்து இறங்கிய சமயம் வானமே பூமிக்கு இறங்கியது போல, அப்படி ஒரு மழை டெல்லியே மிதந்தது. டெல்லியிலிருந்து அந்த மழையிலும் ஒரு வழியாக ரிஷிகேஷ் வந்தடைந்தோம். அங்கு ராம்ஜூலா, லட்சுமண் ஜூலா பாலங்கள் மற்றும் 12 மாடி கோயிலை தரிசித்தோம், அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பின்பு அங்கிருந்து தேவ பூமி எனப்படும் தேவ பிரயாகுக்கு சென்றோம்.

அங்கு இருவேறு நிறங்களில் அலக்நந்தா மற்றும் பாகீரதி நதிகள் ஒன்றாக கலக்கும் இடத்தை பார்த்தோம். அப்படி ஒரு அழகு அற்புதமாக இருந்தது இந்த இடத்தை மிகப்பெரிய புண்ணிய சேத்திரம் என்று சொல்கிறார்கள் இந்த இடத்தை பஞ்ச பிரயாக் என்கிறார்கள் புராணப்படி சிவனின் ஜடாமுடியில் இருந்து வரும் கங்கை ஐந்து பிரிவாக வருவதாகவும் அதுவே பஞ்ச பிரயாக் என்று கூறுகிறார்கள். இமயமலையின் உச்சியிலிருந்து கங்கை வருவதால் நீர் அப்படியே ஐஸ் போல சில்லென்று இருந்தது. இங்கு நீராடிவிட்டு பின்பு இங்கிருக்கும் ரகுநாதர் ஆலயத்தை தரிசித்தோம். பின்பு அங்கிருந்து கர்ணப்பிரயாகைக்கு சென்றோம்.

இந்த இடத்தில்தான் கர்ணர், கிருஷ்ணரிடம் தனது புண்ணியத்தை எல்லாம் தானமாக வழங்கினாராம், அதனால்தான் இங்கு கர்ணரும் கிருஷ்ணரும் ஒரே ஆலயத்தில் அருள் பாலிக்கின்றனர், இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இருவரையும் தரிசித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தோம். வழியெல்லாம் தேவதாரி எனப்படும் பைன் மரங்கள் இது ஒரு அதிசய மரம், ஆதிகாலத்தில் இந்த மரத்தைக் கொண்டுதான் இங்கு வாழ்ந்து வந்த ரிஷிகள் அனைவரும் யாகம் செய்வார்களாம். கற்பூரம் போல நெருப்பு பட்டதும் உடனே எரிவதால் இந்த மரத்தில் தீப்பட்டால் அது காட்டுத் தீயாக பரவுகிறது என்றார்கள்,

பாபா குகை ஒரு அதிசயம்

கிட்டத்தட்ட ஒன்பது மணி நேர பயணத்திற்கு பின்பு துவாரகாட்டில் இருக்கும் மாயாங் ஹோட்டலை அடைந்தோம். அப்பொழுது மணி இரவு எட்டு இதில் ஒரு ஆச்சரியம் எட்டு மணிக்கு கூட இங்கு சூரியன் அஸ்தமிக்கவில்லை. பார்ப்பதற்கு நம் ஊர் 6:00 மணி போல இருந்தது அதேபோல அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் விடிந்துவிட்டது. அதனால் அதிகாலையிலே எழுந்து இமயத்தின் அழகை ரசித்தோம்.

காலை 10 மணிக்கு நாங்கள் தங்கியிருந்த மாயாங் ஹோட்டலில் இருந்து எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது சுமார் ஒரு மணி நேரம் பயணித்த பின் மலை மேல் இருக்கும் ஒரு சின்ன டீக்கடையை அடைந்தோம், கடை சிறிதானாலும் உண்ணத் தேவையான அனைத்தும் அதாவது அந்த நேரத்திற்கு பசியா என்ன தேவையோ அவையெல்லாம் இங்கு கிடைக்கிறது சென்னையிலிருந்து வருகிறோம் என்றதும் நன்கு உபசரித்தார்கள் சுற்றியிருந்த மலையின் அழகை பார்த்தோம். சொல்ல வார்த்தைகளே இல்லை அப்படி ஒரு அமைதி அழகு ஆனந்தம்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் எங்கள் வாகனத்தில் சுமார் 15 நிமிடம் பயணித்தோம். இறுதியாக மலை அருகே வந்தோம், இனி வண்டி போகாது நடந்துதான் செல்ல முடியும் என்றார்கள். அங்கிருந்து சுமார் 3 km தூரம் மலை ஏற்றம் ஒரு கொம்பின் உதவியால் மலையேற ஆயத்தமானோம், சுமார் ஒரு மணி நேரம் மேல் நடந்த பின் ஒரு வழியாக ஒய் எஸ் எஸ் அலுவலகத்தை அடைந்தோம். அங்கு ஒரு தியான அறை இருந்தது உள்ளே சென்று பாபா புகைப்படம் முன் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தோம் பின்பு அங்குள்ள புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் நடந்தோம் சுமார் ஒரு 15 நிமிடங்கள் மலைமேல் மீண்டும் நடந்தோம் எங்களுடன் வந்தவர்கள் சிலருக்கு நடக்க முடியவில்லை அதனால் சிறிது நேரம் அமர்ந்து அமர்ந்து நடக்க வேண்டி இருந்தது, இறுதியில் ஒரு வழியாக பாபா குகையை அடைந்தோம் ஏதோ பழகினது போல எங்களை பார்த்ததும் ஓடி வந்தார். ஒரு பைரவர் அவருக்கு உள்ளூர் வாசி சிலர் பிஸ்கட்டை போட்டார்கள், ஆச்சரியமாக இருந்தது பின்னர் பாபாஜி குகைக்குள் சென்றோம் சுமார் ஆறு முதல் எட்டு பேர் அமரும் குகை அது அமைதியாக இருந்தது உள்ளே சென்று கண்களை மூடினோம் மனம் அப்படியே லயித்துப் போனது,

சொன்னால் நம்ப மாட்டீர்கள் பாபாவே அருகே இருப்பது போல ஒரு உணர்வு அப்படி ஒரு ஆனந்தம் அழுகை மனதின் அழுக்குகள் எல்லாம் காணாமல் போனது, இது எத்தனை பெரிய பாக்கியம், எத்தனை பெரிய மகான்கள் எல்லாம் தவம் செய்த இடம், இத்தனை சக்தி வாய்ந்த இமயமலை உச்சியில், பல்லாயிரம் அடி உயரத்தில் பாபா குகையில் இன்று நாங்கள் அமர்ந்து பாபாஜியை வணங்கும் பாக்கியம் கிடைத்துள்ளது என்று எண்ணும்போது எங்களுக்கு வார்த்தைகளே எழவில்லை.

இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம். திகில் நிறைந்த கர்ண பிரயாகை வழியே செல்ல வேண்டாம், ஒரு அடி தவறினாலும் கூட அதள பாதாளம் தான் என்று எத்தனையோ பேர் தடுத்தார்கள் எச்சரித்தார்கள், ஆனால் யாருமே செல்லாத இந்த பாதையில் வந்ததால் தான் இமயமலையின் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கண்டு அதை நேயர்களுக்கு காட்டும் பாக்கியமும் கிடைத்தது, தமிழகத்தில் பிறந்த மகா அவதார் பாபாஜி தவம் செய்த இமயமலைக்கு பலராலும் செல்ல முடியாது, ஆனால் மகான்கள் ஆசீர்வாதத்தால் மாற்றம் தரும் மகான்கள் மூலம் அனைவரும் காணும் மகா பாக்கியத்தை இன்று நாம் நாம் பெற்றுள்ளோம், இது எல்லாமே பாபாஜியின் அருளால் நடந்தது என்பதை தவிர வேறென்ன சொல்ல…

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments