புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கந்த சஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் விழாவையொட்டி, காவடி எடுத்து பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் விழாவையொட்டி 55வது ஆண்டாக, ஆலங்குடியில் உள்ள தர்தசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் ஆலயத்தில், அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிக்கு, கடந்த 2ம் தேதி முதல் அபிஷேக ஆராதனைகளும், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து, சூரசம்ஹார விழாவையொட்டி நேற்று பக்தர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 61 காவடிகள் எடுத்து சந்தைப்பேட்டை விநாயகர் கோவிலில் இருந்து பல்வேறு பகுதி வழியாக நாமபுரீஸ்வரர் கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர், கலசங்களில் கொண்டு செல்லப் பட்ட தீர்த்தங்களால் ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இன்று இரவு 8 மணிக்கு சுவாமிக்கு பொதுமக்களால், சீர்வரிசை கொண்டு வந்து, திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகின்றன.
இவ்விழாவை கந்த சஷ்டி விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். முத்தையா திருப்பதி மற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர் மெ.அ.த மனமோகன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.